காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை

ஜனாஸாவின் சட்டங்கள்

தொடர் 03


அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும்.
இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து விட்ட தவறான நம்பிக்கையாகும்.

மறுமணத்தைத் தடுக்கக் கூடாது

கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது.

தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.

தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். திருக்குர்ஆன் 4.19

பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 2:234

அல்லாஹ்வுடைய எச்சரிக்கைக்கு அஞ்சி சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.

இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை
எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். திருக்குர்ஆன் 2:134
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. திருக்குர்ஆன் 2:286

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 6.164
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை. திருக்குர்ஆன் 17:15

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. திருக்குர்ஆன் 35:18

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 39:7

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? திருக்குர்ஆன் 53:36-39

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்ற பொதுவான இந்த விதியிலிருந்து சில காரியங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்காகக் காட்டித் தந்த அந்தக் காரியங்களை மட்டும் இறந்தவர் சார்பில் உயிருடன் உள்ள அவரது வாரிசுகள் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்ச் சேரும்.

இன்ஷா அல்லாஹ்


ஜனாஸாவின் சட்டங்கள் தொடறும்....

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:
அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்