ஜனாஸாவின் சட்டங்கள்

மரணம் நெருங்கி விட்டால்...

தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது.

இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை ஏதுமின்றி காணப்படும் எத்தனையோ பேர் யாரும் எதிர்பாராத வகையிலும், விபத்துக்களிலும் திடீரென்று மரணித்து விடுகின்றனர். இத்தகையோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்து படிப்படியாகத் தளர்ச்சி அடைந்து மரணிக்கின்றனர். தமக்கு மரணம் விரைவில் வந்து விடும் என்பதை இவர்கள் அன்றாடம் உணரக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.

திடீரென மரணிப்பவர்களுக்குக் கிடைக்காத நல்ல வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கின்றது. மரணம் நெருங்கி விட்டதை இவர்கள் உணர்வதால் கடந்த காலங்களில் செய்யத் தவறிய காரியங்களைச் செய்து முடிக்கவும், கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யவும் இவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

மரணத்தை இறைவனிடம் வேண்டுதல்

மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள்.
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5671, 6351

இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435

எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மரணத்தை நெருங்கியவர் இறுதியாகச் செய்ய வேண்டியது
மரணத்தை நெருங்கியவர் கடைசியாக லாயிலாஹ இல்லலல்லாஹ் என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ், மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள். பின்னர் தமது கைகளை ஊன்றி ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி...) என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4449, 6510

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது ஃபிர் ரஃபீகில் அஃலா என்று கூறலானார்கள்அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4436

நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக் என்று கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4440

இறைவா என்னை மன்னித்து அருள் புரிவாயாக! நண்பனுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்பது மேற்கண்ட துஆவின் பொருள்.

பல்வகை மரணங்கள்
ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலை பரவலாக மக்களிடம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், அவர்கள் காலத்தில் மரணித்த பலரது மரணங்களையும் ஆய்வு செய்யும் போது இந்த மனநிலை முற்றிலும் தவறானது என்று அறிந்து கொள்ளலாம்.

சிறு வயது அல்லது இளம் வயது மரணம்

ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.
சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.
எப்போது மரணம் ஏற்படும் என்று இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் 7:34

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் 10:49

எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
திருக்குர்ஆன் 15:5

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் 16:61

மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான் திருக்குர்ஆன் 35:45

அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)
திருக்குர்ஆன் 40:67

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 63:11

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)நூல்: புகாரி 102, 1250, 7310

சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக இல்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த போது, இவருக்குச் சொர்க்கத்தில் பாலுட்டும் அன்னை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1382, 3255, 6195

பால் குடிக்கும் பருவத்தில் இப்ராஹீம் மரணித்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். பெற்றோரின் தவறுகள் காரணமாகவே குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால் இப்ராஹீம் நிச்சயம் குழந்தைப் பருவத்தில் மரணித்திருக்க முடியாது.

இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது. எத்தனையோ நன்மக்கள் இளம் வயதில் மரணம் அடைந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு புதல்விகளை அல்லாஹ் கொடுத்தான். நான்கு பேரும் மிகவும் இளம் வயதில் தான் மரணித்தார்கள். மூன்று புதல்விகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்.

ருகையா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் மரணித்தார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு மரணித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஆறு மாதங்களில் மரணித்தார்கள். (புகாரி 4241)
நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு புதல்விகளும் மரணித்திருப்பதால் இளமை மரணம் துர்மரணம் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.


இன்ஷா அல்லாஹ்


ஜனாஸாவின் சட்டங்கள்

தொடறும்

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்




டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்