ஓட்டுநர் உரிமம் வாகனங்களை ஓட்டுவதற்கே; மக்களை கொல்வதற்கு அல்ல: உயர் நீதிமன்றம் கண்டிப்பு


சென்னை, மே 15: ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் உரிமம் வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டுமே, மக்களை கொல்வதற்கு அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


 கடந்த 28.6.2002 அன்று ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் விபத்துக்குள்ளானது. பொய்மான் கரடு என்ற ஊர் அருகே நடந்த விபத்தின்போது சாலையோரம் இருந்த கிணற்றினுள் அந்த பஸ் விழுந்தது. அந்த விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர்.


 இதுதொடர்பாக விசாரணை நடத்திய அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அந்த பஸ்ஸின் ஓட்டுநர் ஆர். ராஜனை பணியிலிருந்து நீக்கியது.இதை எதிர்த்து சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜன் மனு தாக்கல் செய்தார். எனினும், அவரது மனுவை தள்ளுபடி செய்த தொழிலாளர் நீதிமன்றம், ராஜனை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.


 இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என். பால் வசந்தகுமார், ராஜனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.


 தீர்ப்பு விவரம்: இயந்திரக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்தது என்றும், தனது கட்டுப்பாட்டை மீறி நடைபெற்ற விபத்துக்கு தன்னை பொறுப்பாக்க முடியாது என்றும் ஓட்டுநர் கூறியுள்ளார். ஆனால், விபத்து நடந்த பஸ்ஸில் எவ்வித இயந்திரக் கோளாறும் காணப்படவில்லை என்று மோட்டார் வாகன ஆய்வாளர் தந்த அறிக்கையை போக்குவரத்துக் கழக நிர்வாகம் அளித்துள்ளது.


 ஓட்டுநர் அதிவேகமாக பஸ்ûஸ இயக்கியது, உரிய கவனமின்றி பணியில் ஈடுபட்டது ஆகியவையே விபத்துக்கு காரணம் என்பதையும், அதனால்தான் 8 பேர் உயிரிழக்கவும், 20 பேர் காயமடையவும் நேர்ந்தது என்பதையும் தொழிலாளர் நீதிமன்றம் தனது விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது. எனவே, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.


 ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் மீது கருணை காட்டினால், அது மற்றவர்களின் வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு தவறான சமிக்ஞையை தந்து விடும்.
 வாகனங்களை இயக்குவதற்காக மட்டுமே ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அது மக்களை கொல்வதற்காக வழங்கப்படவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
நன்றி"தகவல் :தினமணி .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்