தமிழர் மீது இணைப்பை திணிக்கும் இலங்கையும் தீர்வைத் திணிக்கும் இந்தியாவும்!- பூநகரான்


 தமிழர் மீது இணைப்பை திணிக்கும் இலங்கையும் தீர்வைத் திணிக்கும் இந்தியாவும்!- பூநகரான்
[ வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012, 01:47.58 PM GMT ]

இந்தியப் பாராளுமன்றக் குழு  இலங்கை வந்து திரும்பியிருக்கிறது. இந்தக் குழுவிற்கு மகிந்த எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லையென கொழும்பு தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழரிற்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான 13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மகிந்த எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லையென கொழும்புத் தரப்பு கூறுகின்றது. இல்லை, அது பற்றிப் பேசினோம் என இந்தியத் தரப்பு கூறுகிறது.

இரு நாடுகளினதும் பிரபல இரண்டு பத்திரிகைகளே இந்த முரண்பாடான செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தியத் தூதுகள் இலங்கைக்கு தூது வருவதும், வந்து அவமானப்பட்டுத் திரும்புவதும் ஏதோ ஒன்றும் புதிய விடயமல்ல.

இதிகாச கால அனுமன் காலந்தொட்டு தொடரும் நாடகமிது.

அன்று வந்த அனுமனோ இலங்காபுரியை எரியூட்டித் திரும்பினான. நேற்று வந்து குழுவின் முடிவோ, தமிழர் நெஞ்சங்களை மட்டுமன்றி பான் கீ மூன் அடங்கலாக மேற்குலகின் மனங்களிற்கே எரிச்சலையூட்டியுள்ளது எனலாம்.

தூது வந்த குழுவை வரவேற்ற மகிந்த அதே தூதுக் குழு ஊடாகவே தெளிவாக ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

13 வது திருத்தச் சட்டத்திற்கு அடிப்படையான “ராஜீவ் - ஜே ஆர்” இலங்கை இந்திய ஒப்பந்தமே (1987) இந்தியாவால்  இலங்கை மீது திணிக்கப்பட்டது என அவர் விபரமாக எடுத்துரைத்துள்ளார்.

இதனூடாக அவர் அதை அமுலாக்க இயலாதெனவும், இனியும் இந்தியா எதையும் செய்யும்படி இலங்கையைக் கோரக் கூடாதென தெளிவாக தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாதா?

வந்த அம்மா தாங்கள் சுற்றுலா வரவில்லையென்றும் அக்கறையுடன் வந்து நிலைமைகளை அவதானித்ததாகவும் கூறியுள்ளார்.  அப்படியானால் அவர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தன்னைத் தயார்படுத்தி ஆயுத்தமாக அல்லவா வந்திருக்க வேண்டும்.

இந்தியா  இலங்கை  மீது 1987 ல் அந்த ஒப்பந்தத்தை திணித்தது என்று மகிந்த கூறி முடிக்க முன்னரே, சிங்களவராகிய நீங்கள் தமிழர் மீது தனிச் சிங்களச் சட்டத்தை திணித்தீர்கள், தரப்படுத்தலை திணித்தீர்கள். இலங்கை ஒரே தேசமென்ற ஒற்றையாட்சியை அவர்கள் மீது திணிக்கிறீர்கள் ……

இப்போது புத்த சிலைகளையும் திணிக்கிறீர்கள். இந்தியாவிலும் தமிழர் இருப்பதால், இந்தியராகிய நாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் தமிழரிற்கென ஒரு நாடு அல்லது அதிக அதிகாரம் அல்லது வலுவான பலம் உலகில் தமிழரிற்கு எங்கு அமைவதையும் அனுமதிக்க முடியாது.

எனவே தான் தீவின் பிரிவினையைத் தவிர்க்க அதிகாரத்தை பகிர்ந்து விரைந்து கொடுங்கள் என்று கேட்கிறோம் என்ற “ உண்மையை” சாணக்கியமாக உரைத்திருந்தால் போட்டுள்ள குங்குமப் பொட்டின் மதிப்பும் மகிமையும் அதிகமாகியிருக்கும்.

நீங்கள் ஈழத் தமிழர் மீது இணைப்பை திணிப்பதால் தான் இந்தியராகிய நாங்கள் அரசியற் தீர்வை உங்கள் மீது திணிக்க வேண்டியுள்ளது. வற்புறுத்துகிறோம். இனியும் இலங்கை இராணுவத்தை விலக்காது, சிறியளவு அதிகாரத்தை பெயரளவில் ஆவது (13) தமிழரிற்கு வழங்காது போனால் இந்தியாவாற் கூட சர்வதேச அழுத்தத்தில் இருந்து கொழும்பைக் காப்பாற்ற இயலாது என்பதை சுட்டிக் காட்டியிருக்கலாமே. விருந்து சாப்பிட்டுக் கொண்டே விடயத்தை கொடுப்பது தானே ஜனநாயகம்.

ஆம், இவ்வாறு பேசத் தெரிவது அரிது. தெரிந்தாலும் பேசுவது அதனிலும் அரிது. கனடாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இன்னுமாக இன்னும் பல நாடுகளிலிருந்தும் உறுதியாகப் பேச வந்த பொப் றே போன்ற பலரை மகிந்த நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இவரும் கனடாவில் எதிர்க்கட்சியைச் சாரந்தவராயினும், கனேடிய அரசின் விருப்பத்தையும் பிரதிபலித்தவர் என்பதை கொழும்பு அன்றும் கவனிக்கத் தவறிவிட்டது.

இந்தியாவின் அனைத்துக் கட்சிகளினதும் இந்திய தேசியக் குழுவாக வடிவெடுத்து வந்த இந்த அம்மா எதிர்க்கட்சித் தலைவி என்பதை கபடமாக பயன்படுத்த, ஜனாதிபதி மகிந்த, காங்கிரஸ் கட்சிக் கால தலைமைகளான இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி போன்றவர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் பிரதமராக வரும்போது மொரார்ஜி தேசாய் (1979) போல எங்களோடு நட்புடன் இருக்கலாம் என்ற துரியோதனன் பாணி இராசதந்திரத்தையே பாவித்துள்ளதாகவே நான் பாரக்கிறேன்.

இவ்வாறு பேச்சுக்களிலும் விருந்துகளிலும் இராசதந்திரக் குளிகைகள் பரிமாறப்படும் ஏக காலத்தில் புலம்பெயர் தமிழராகிய எங்களின் சமகால பங்களிப்புப் பணிகளின் வடிவங்கள் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பதை இலட்சியம் மாறாது அதன் வடிவங்கள் மாற வேண்டும் என்பதற்கூடாகவே பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

ஏனென்றால் உயிரைக் கொடுத்து போராடியும் எதுவும் கிடைக்க விடாது துரோகம் இழைத்து விட்டார்கள். அதாவது உயிர்களைக் கொடுத்தால் ஏதாவது விடிவு கிடைக்குமா என்றால் அதுவும் நடக்கவில்லை. ஆம், இலட்சியம் உயிரிலும் மேலானது தான்….உயிரைக் கொடுத்தால் ஏதாவது கிடைக்கும் என்பது நிச்சயமானால் இல்லாவிடின் யாருக்கும் பலனின்றி நாமே நம்மை அழிப்பது விவேகமாக புலப்படவில்லை.

எனவே புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் சாயம் பூசப்படாத, சமூக அமைப்பிற்களினூடான இனப் பணியினை மேலும் எவ்வாறு வலுப்படுத்த நாமென்ன செய்ய வேண்டும் என்பதே சம காலக் கேள்வியாகலாம். இந்த வலுப்படுத்தலிற்கு நேச சக்திகள் ஆன போதும் தடையாக உள்ளவை எவை, அவை எவ்வாறு இக்காலத்தில் வாசிக்க வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றியே புலம்பெயர் தமிழர் சிந்திக்க வேண்டிய காலமிது.

இன்று மகிந்த தென் கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை கைவிட இலங்கை அரசு சிந்திப்பதாகவும் தெரிகிறது. இவ்வாறு ஈழத் தமிழர் விடயம் இன்று சர்வதேசமயப் பட்டதிற்கும் அப்பால் உலக அழுத்த அரசியலாகவே ஆகிவிட்டது.

இந்த உலக அழுத்த அரசியலில் நமது இனக் கடமையான அரசியற் பங்களிப்பு என்ன? அது எவ்வாறு ஆதரவாக அமைய வேண்டும் என்பதே நம் காலத் தேடலாக இருக்க வேண்டும். இதை விடுத்து தமிழர் மத்தியில் சுயமய அரசியல் நடத்துவதை விடுத்து உலகமய அரசியலிற்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்.

நமது இனப் பிரச்சினையை இந்தியா தனது கட்டிற்குள் வைத்திருக்க இந்தியா இன்னமும் விரும்புகிறது. 1983 யூலை இனக் கலவரத்துடன் அன்றைய தமிழர் தலைவர் திரு அ அமிர்தலிங்கம் இந்தியா சென்று அன்னை இந்திராவைச் சந்தித்தபோது முதலிற் கேட்டது இந்த விடயத்தை ஐ நாவிற்கு கொண்டு செல்ல உதவுங்கள் என்பது தான். அதற்கு இந்திரா “இதனை நாங்கள் ஐ. நா கொண்டு சென்றால் மேற்குலகம் தங்களிற்கு தேவையான முறையில் தீர்ப்பார்கள். எனவே நாங்கள் பிராந்திய மட்டத்தில் தீர்த்துக் கொள்வோம்” என்று கூறியிருந்தமையை நாங்கள் கவனிக்க வேண்டும்.

உண்மையில், இந்தியா முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பிராந்தியப் பொறியை மீண்டும் பலப்படுத்துவதற்காக, அதற்கு சாதகமற்று எழுந்த 2002 “ரணில் - பிரபா” சமாதான ஒப்பந்தத்தையும், அதனூடாக மேற்குலகம் ஈழத் தமிழர் விவகாரத்தை கையாளும் வாய்ப்பையும் செயலிழக்க வைப்பதும் இன்னொரு நோக்கம் என்பதை புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் உணர்ந்து, கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், மற்றும் கனேடியத் தமிழர் பேரவை போல சர்வதேச அழுத்தத்துடன் சமாந்தரமாக பயணித்து கொழும்பிற்கான உலக அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.

கனேடியப் பாராளுமன்றத்தில் மீண்டும் காணொளியைக் இவர்கள் காண்பித்துள்ளார்கள். இவர்களிற்கான உரிய பலமான ஆதரவை நாம் வழங்க வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அதாவது, இந்தியாவை பகைக்காது அனுசரிக்கும் அதேவேளை, இந்தியாவாலும் நிலைமையை பிராந்திய வட்டத்துள் வைத்திருக்க இயலாத அளவு, அதை ஒரு சுயாதீன விசாரணை என்ற உலக மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

போர்க் குற்றம் என்பதற்கும் அப்பால் இது இன அழிப்பு விவகாரமாக உலக அழுத்தத்தை நேரடியாகக் கொழும்பின் மீதும், மறைமுகமாக இந்தியா மீதும் பிரயோகிக்க ஏதுவான வடிவத்தை தற்காலிகமாகவேனும் நாமெடுக்க வேண்டும்.

இதை விடுத்து, இந்தியாவையும் அமெரிக்காவையும் இவைகளுடன் பயணிக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பையும், எங்கள் மின் கணணிப் பக்கங்களில் விமர்சித்து இவ்வாறான இராசதந்திர நகர்வுகளிற்கு ஆதரவு தரவல்ல இன உணர்வுள்ள புலம்பெயர் தமிழர்களை இலட்சியம் கொள்கை போன்ற வார்த்தைகளால் கட்டிப் போடுவதை நாம் உணர்ச்சிக் கண்களை மூடி, அறிவுக் கண்களைத் திறந்து காண வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தினூடாக இந்திய மத்திய அரசையும், கனடாவிலிருந்தும் அமெரிக்காவிற்குள்ளிருந்தும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் வலுச் சேர்க்க வல்ல செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவையும் இந்தியாவையும் அதனுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பையும் இன ரீதியிலான உலகம் ஏற்கும் ஜனநாயக போக்கிற்கு இசைவான வடிவங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் இலங்கை ஒரு தீவு ஆனால் இரு நாடு என்ற இரட்டை நாட்டுக் கோட்பாட்டிற்கு எதிராகவே இலங்கையும், இந்தியாவும் செயற்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளிலும் தமிழர் இருப்பதால் இந்த நிலையே இன்று வரை தொடர்கிறது. இந்தியாவும் இலங்கையும் நண்பர்கள் அல்ல. ஆனால் தமிழரிற்கு நாடு மட்டுமல்ல அதிக அதிகாரங்கள் கூட கிடைக்கக்கூடாது என்பதே இந்தியாவின் தேசியத் தேவையாகவும் இலங்கையின் கொள்கையாகவும் உள்ளமையை நாம் புரிந்து செயற்பட வேண்டிய காலமிது.

விடுதலைப் புலிகள் பெங்களூரையும் திம்புவையும் டெல்லியையும் தாண்டி மேலெழுப்பி உலக நகரங்களிற்கு கொண்டு வந்த தமிழர் இனப் பிரச்சனையை சார்க் மாநாட்டின் ஊடாகவும், அணி சேரா அமைப்பின் ஊடாகவும், இந்தியாவும் இலங்கையும் முள்ளிவாய்க்காலுள் முடக்கி அழித்தமையே நிஜம்.

இந்தப் பிராந்திய மேற்குலகப் போட்டிக்குள் யாருடனும் பகைக்காது இயலுமான அளவு பெற்றுக் கொள்ள புலம்பெயர் தமிழர்களின் அரசியற் பங்களிப்பு அவசியம். அது இந்திய அக்கறையையும் தாண்டி மீறி, மேற்குலகின், ஐரோப்பாவின், சர்வதேசத்தின் கரிசனைக்குள் வர வேண்டும் என்பதே எனது இன்றைய பார்வையாகும்.

எனவே இந்தியத் தூதுக் குழுவின் தோல்வி நமது வெற்றியா தோல்வியா என்பதை காலமும் நமது அரசியல் இராசதந்திர நகர்வுகளும் தான் தீர்மானிக்க வல்லனவாக உள்ளன. சீதையைக் கடத்துவதிலும், சூதாட்டத்திலும் மகிந்த இன்று வெல்லலாம். இதில் இறுதி வெற்றி யாருக்கு என்பதில் புலம்பெயர் தமிழரின் அரசியற் பங்களிப்பே அதிகம் அவசியமானது என்பதே தமிழ்த்தாயின் சமகாலத் தேவையாகும்
(தகவலுக்கு நன்றி : தமிழ் வின் இணைய தளம் .)

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்