நீலம் புயல்

நீலம் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தின் வட கடலோர மாவட்ட மக்களை அச்சத்திற்குள்ளாக்கிய நீலம் புயல் புதன் மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் வலுவிழந்த போதிலும், வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நீலம் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் புதன் காலை சென்னைக்கு தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இதனையடுத்து, மாலை நான்கரை மணியளவில் நீலம் புயல் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையை முழுவதுமாக கடக்க 3 மணி நேரம் எடுத்துக் கொண்டது. புயல் கரையைக் கடந்த போது கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் சாலைகளில் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் கடலோரத்தில் வசித்து வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் வரை சேதம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக 5 மணி நேரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சென்னையில் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் புயல் மழை காரணமாக 250 மின்கம்பங்கள் சாய்ந்தன. அவை அனைத்தும் உடனடியாக சீர் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நீலம் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.



புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயல் மற்றும் மழை பாதிப்புகளிலிருந்து மக்களை உடனடியாக மீட்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. போக்குவரத்தை சரி செய்வது, வீழ்ந்துள்ள மின்கம்பங்களை அகற்றி மின்சாரத்தை சீராக வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 பேர் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நீலம் புயல் வலுவிழுந்து தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக சென்று ஆந்திராவை சென்றடையும் என்று வானிலை மையம் கூறி இருக்கிறது. மாமல்லபுரம் வழியாக கரையை கடந்த புயல் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக வலுவிழந்து பயணம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக புயல் வலுவிழந்து பயணம் செய்யும் போது அந்த பகுதியில் மழை பெய்வதுடன், சூறைக்காற்றால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக வந்தவாசியில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, புயலுக்கு திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவரும், வேலூர் மாவட்டத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை அருகே புயல் காரணமாக கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து தப்பிய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

செய்தி

பதிவு செய்தநாள்
01/11/2012
  அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்