பாகிஸ்தானில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 127 நபர்கள் சம்பவ இடத்தில் இறந்த பரிதாபம் .

இஸ்லாமாபாத், ஏப். 21-
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு போஜா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது. நேற்று மாலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரை இறங்க தயாரானபோது சாக்லா விமான தளம் அருகே கோதுமை வயல்கள் நிறைந்த பக்ரியா குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் தீப்பிடித்தது.
 

எனவே, அந்த பகுதியில் இருந்த 40 வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சிப்பந்திகள் உள்பட 127 பேரும் பலியாகினர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அங்கு விபத்தில் பலியானவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. தீயில் சிக்கி பலரது உடல்கள் கறிக்கட்டைகளாக கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் ஒன்றாக சேகரித்தனர். பின்னர் துணியில் மூட்டைகளாக கட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் அவை இஸ்லாமாபாத்தில் உள்ள மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளான போது இஸ்லாமாபாத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தது.  மோசமான வானிலை காரணமாக விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என பாகிஸ்தான் கப்பற்படை விமானி கேப்டன் அர்ஷாத் மெஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது. மேலும், சேகரிக்கப்பட்ட உடல்கள் இஸ்லாமாபாத் மருத்துவ கல்லூரியில் டி.என்.ஏ. பரிசோதனை செய்தபின் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய விமான விபத்து நடந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு மார்கால்லா மலைப்பகுதியில் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக ஏர்புளூ ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 152 பேர் உயிரிழந்தனர்.(நன்றி மாலைமலர் )

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்